முல்லைத்தீவில் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு; யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வில் தொற்றுறுதி
முல்லைத்தீவில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக பிரதேசமக்கள் கடும் விசனம் தொிவித்திருக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,
விசுவமடு - வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந் நிலையில் அவருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று நண்பகல் முல்லைத்தீவு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் குடும்பத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து , சடலம் விசுவமடுவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கிற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டதாக பிரதேச மக்கள் கடும் விசனம் தொிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தில் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீடு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.