ஆயுதங்களுக்காக கோடிக்கணக்கான டொலர்கள் செலவு ; ஐ.நா.வில் ஜனாதிபதி அனுர சுட்டிக்காட்டு
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் நேற்று உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் உலகளாவிய வறுமை, ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்கள் போன்ற பல சவால்களை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். காசா பகுதியில் தொடர்ந்து நிகழும் மனிதாபிமானப் பேரழிவு குறித்து அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும், உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பாலஸ்தீனத்திற்கான தனி நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். ஊழலை ஒரு 'தொற்றுநோய்' என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இது அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகக் கூறினார்.
இலங்கையில் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். 'துன்பத்திலிருந்தும் இருளிலிருந்தும் விடுபட்டு, செழிப்பான தேசம் மற்றும் அழகான வாழ்க்கை' என்ற தொலைநோக்குடன் இலங்கை மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ஊழலற்ற, நீதிமிக்க ஆட்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பில்லியன் கணக்கான மக்கள் பசியால் வாடும் நிலையில், கோடிக்கணக்கான டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவிடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.