ஜனாதிபதி பொய் கூறுவதை விட பொலிஸாரிடம் உண்மைகளை கூறுவது சிறந்தது ; உதய கம்மன்பில
ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து பொய் கூறுவதை காட்டிலும், பொலிஸாரிடம் உண்மைகளை தெரிவிப்பது சிறந்த தீர்மானமாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கூற்று முற்றிலும் பொய்யானது
கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு சென்று விசேட உரையாற்றிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கமையவே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைதுசெய்யப்பட்டதாக உதயகம்மன்பில கூறுவது முற்றிலும் தவறானது எனவும், நீதிமன்ற உத்தரவுகளுக்கமையவே அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் இந்த கூற்று முற்றிலும் பொய்யானது எனவும் நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்ய எந்த நீதிமன்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்தது மாத்திரமல்லாது, பிணையில் செல்ல முடியாதபடி, கொலை குற்றச்சாட்டில் அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எனவே, தமது அரசாங்கம் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு நீதிமன்றத்தை காரணம் காட்ட வேண்டாம் என ஜனாதிபதியை தாம் எச்சரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கூறுவது பொய் எனில் அது குறித்து நாடாளுமன்றில் தெரிவிப்பதை காட்டிலும் காவல்துறையிடம் முறைப்பாடளிப்பது சிறந்த செயற்பாடாக அமையும் எனவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.