நடைபயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் ; தவறாமல் கடைப்பிடியுங்கள்
முதியோரின் முக்கிய பொழுதுபோக்கே, மாலைநேர நடைபயிற்சியாகதான் இருக்க முடியும். அங்குதான் தங்கள் வயதையொத்தவர்களை சந்தித்து, சிறிது நேரம் பேச முடியும்.
ஆனால், இந்த கோடைக்காலத்தில், நடைபயிற்சி செல்லும் முதியோர், சில விஷயங்களில் கூடுதலாக அலர்ட்டாக இருக்க வேண்டும்.
மாலை 5:00 மணிக்கு மேல் வாக்கிங் செல்லலாம். குவார்ட்டர்ஸ், கம்யூனிட்டி வில்லா, அபார்ட்மென்ட் மாதிரியான குடியிருப்புகளில் இருப்போர், குழுவாக நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.
இப்படி செல்வதன் மூலம், எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலும், உடனே அருகில் இருப்போர், வீட்டிலுள்ளோரிடம் தகவல் தெரிவிப்பது, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்படாது.
தனி வீடுகளில் வசிக்கும் முதியோர், கட்டாயம் துணையுடனோ அல்லது வீட்டிலுள்ளோர், நண்பர், அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து, வெளியிடங்களுக்கு செல்வது அவசியம்.
தனியாக தான் வெளியிடங்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை இருந்தால், எமர்ஜென்சி தொடர்பு எண்கள் அடங்கிய சிறிய போன் டைரி, உடன் வைத்திருப்பது நல்லது.
சின்ன பாட்டிலில் தண்ணீர், சர்க்கரை, ரத்த கொதிப்பு மாத்திரைகள் எடுப்பவர்களாக இருந்தால் அம்மாத்திரைகள், குளூக்கோஸ், சாக்லெட்டுகள், பிஸ்கட் போன்றவை உடன் கொண்டு செல்வது நல்லது.
வழக்கமாக வாக்கிங் செல்லும் நேரம், துாரத்தை, பாதியாக குறைத்து கொள்ளலாம். சிறிது துாரம் நடப்பது சற்று ஓய்வெடுப்பது, பிறகு முடிந்தால் சிறிது நேரம் நடப்பது என்பதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
உடல் தளர்வாக இருக்கும் போது, ஓய்வு கொடுக்க வேண்டும். எல்லா நாட்களிலும், ஒரே மாதிரியான உடல் இயக்கம் இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இளமையில் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருந்த பொழுதுபோக்கு அம்சங்களை, முதுமையிலும் தொடரலாம்.
நல்ல பாடல்களை கேட்பது, வரைவது, தைப்பது, அழகுப்பொருட்களை உருவாக்குவது என, ஏதாவது ஒன்றில் ஈடுபடுத்தி கொள்ளலாம். அல்லது புதிதாக, பிடித்த ஒன்றை கற்றுக்கொள்ளலாம். இது உங்களின் மன நலனை, கிரீன் சிக்னலில் வைக்க உதவும்.