தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்த நபரால் பதற்றம்
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ் என்ற குடும்பஸ்தர் இன்று பிற்பகல் தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக தனக்குத்தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 9 வயது மகனுக்கு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி தனது மனைவி ஊடாக போதைப்பொருள் வழங்கி வருவதாகவும், சில அரச அதிகாரிகளும் வைத்தியரும் இணைந்து தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் இவர் குற்றம் சுமத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து தனது முறைப்பாட்டை இன்றைய தினம் தலவாக்கலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு வந்த போதிலும் அவர்களும் அதனை ஏற்காததை தொடர்ந்து தனது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
பிரதேச மக்கள் துரித கதியில் செயற்பட்டு அவரை காப்பாற்றி அவசர அம்புலன்ஸ் 1990 ஊடாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தான் எதிர்ப்பு தெரிவித்த போது தனக்கு நோய் இருப்பதாக கூறி வைத்தியர்கள் தன் மீது ஊசிகளை ஏற்றியதாகவும் தற்போது தனக்கு மறதி நோய் இருப்பதாகவும் தன்னை பைத்தியக்காரனாக வைத்தியர்கள் மாற்றி உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.