பணி நீக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட சூரியகந்த பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர், இன்று (26) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்குமாறு கோரியே அவர் இந்த முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார்.
நாடாமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவின் மாமனாருக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படும் காணி ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இரண்டு கஞ்சா செடிகள் கண்டெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, அந்தச் சோதனையில் ஈடுபட்ட சூரியகந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் தன்னைத் தாக்கியதாகக் கூறி டிசம்பர் 20 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினரை குற்றவியல் ரீதியாக அச்சுறுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இப்பின்னணியிலேயே அவர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியுள்ளார்.