தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் சரி, உடலில் பிரச்சனைகள் வருவதற்கும் சரி முக்கிய காரணம் உணவுகள் தான். நாம் ஆரோக்கியமானது என்று நினைத்து தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதே வேளையில் அவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது மோசமான விளைவுகளை உண்டாக்கும்.

பூண்டு பற்களை தினசரி சமையலில் சேர்த்து வந்தாலும், "தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டை பச்சையாக உட்கொள்ளும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும் அவை என்னவென நாம் இங்கு பார்ப்போம்.
இதயத்திற்கு நல்லது
பூண்டில் அல்லிசின் என்னும் கெமிக்கல் உள்ளது. அது உடலில் நைட்ரிக் ஆக்ஸைடின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு உடலில் உள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும். இதன் விளைவாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கும். இதனால் இரத்த நாள அடைப்பு நோய் வராமல் தடுக்கும். இதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கும்

குடலுக்கு நல்லது
நமது குடலில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான பாக்டீரியாக்கள் உள்ளன. அந்த பாக்டீரியாக்கள் நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்வதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் வளர ப்ரீ பயோடிக்குகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ப்ரீபயோடிக்குகள் வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு போன்ற உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளது. எனவே தினமும் பூண்டை உணவில் சேர்த்து வரும் போது, செரிமான மண்டலம் நன்கு வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்

மூளைக்கு நல்லது
தினமும் பல பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இது தவிர புகைப்பிடிப்பது, மது அருந்துவது, தவறான உணவுப் பழக்கங்களால் உடலில் ப்ரீ ராடிக்கல்கள் என்று சொல்லக்கூடிய கழிகள் சேர்கின்றன. இந்த ப்ரீ ராடிக்கல்கள் நமது உடலில் உள்ள செல்களை சேதப்படுத்தும். இதனால் புற்றுநோய், டிமென்ஷியா, நரம்பு சிதைவு நோய் போன்ற பல நோய்களின் அபாயம் அதிகரிக்கும். ஆனால் பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் ப்ரீ ராடிக்கல்களின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள செல்கள் சேதமடைவதை தடுத்து, டிமென்ஷியா போன்ற ஞாபக மறதி நோய் வருவதைத் தடுக்கும்

நோயெதிர்ப்பு சக்திக்கு நல்லது
தினமும் ஒரு பல் பூண்டை காலையில் சாப்பிடும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூண்டில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்ற வைட்டமின்கள், செலினியம், பாஸ்பரஸ், மாங்கனீசு போன்ற நிறைய தாதுஉப்புக்கள் உள்ளன. இது உடலில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் மூலம் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பூண்டிற்கு ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் உள்ளன. எனவே தான் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும் போது, பூண்டு ரசம் வைத்து சாப்பிடும் போது விரைவில் குணமாகிறது

இரத்த சர்க்கரை கட்டுப்படும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூண்டு சாப்பிடும் போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும் இதுமட்டுமின்றி, பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யும், எடை இழப்புக்கு உதவும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரிசெய்யும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினமும் பூண்டு சாப்பிடும் போது தாய்ப்பால் நிறைய சுரக்கும்
