புலிகளின் தலைவரின் இல்லக் காணியில் மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனந்தெரியாத நபர்களால் கிழிப்பு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் பொருத்தப்பட்டிருந்த பதாகை, இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளது.
குறித்த பதாகையில், “தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அவர் வசித்த வீட்டின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், குறித்த பதாகை இனந்தெரியாத நபர்களால் கிழித்தெறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியைப் பார்வையிட்டிருந்தார்.
அவரது வருகையைத் தொடர்ந்து குறித்த பதாகை கிழித்தெறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த பிரபாகரனின் இல்லம் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த இடம் வெறும் காணியாகவே காணப்படுகிறது.