பிணையாளருக்கு நேரடியாக வழக்கு தொடரலாம் ; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் பிணையாளருக்கு எதிராக, கடன் வழங்கிய நிறுவனம், நேரடியாக வழக்குத் தொடர சட்டப்பூர்வ உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எனினும் இதற்கான நிபந்தனையாக பிணைய ஒப்பந்தத்தில் பிணையாளர் தனது அந்த உரிமையை வெளிப்படையாக விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
வங்கி ஒன்றிடம் கடன் வசதிகளைப் பெற்ற நிறுவனம் ஒன்றின் பிணையாளரான விதானகே ஹப்பாவன என்பவரைப் பொறுப்பாக்கிய வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து உயர்நீதிமன்றம் இந்த மேன்முறையீட்டுத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் கடன் வசதிகளுக்காகப் பிணையாக இருந்த பிரதிவாதியிடமிருந்து வட்டியுடன் சேர்த்து 5.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை மீட்டெடுப்பதற்காக வங்கி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது.
எனினும் இதற்குப் பதிலளித்த பிரதிவாதி கடனைப் பெற்ற மற்றும் அதன் முழுப் பலனையும் அனுபவித்த நிறுவனம் தான் முதன்மைக் கடனாளி என்பதால் இந்த வழக்கில் அந்த நிறுவனத்தையும் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்க வேண்டும் என்றும், தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த நிறுவனத்திற்கு எதிராகவே முதலில் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இந்தநிலையில்,ரோம-டச்சு சட்டத்தின் கீழ் பொதுவாக ஒரு பிணையாளர் முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் வழக்குத் தொடர வேண்டும் என்று வற்புறுத்த உரிமை உண்டு என்றாலும், அத்தகைய உரிமையை ஒப்பந்தத்தின் மூலம் வெளிப்படையாகத் துறக்க முடியும் என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வழக்கைத் தீர்த்து வைத்துத் தீர்ப்பளித்த நீதியரசர் சம்பத் விஜேரத்ன, பிணைய ஒப்பந்தத்தின் 15-வது பிரிவின்படி, முதன்மைக் கடனாளிக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்காமல், நேரடியாகப் பிணையாளருக்கு எதிராகத் தொடர வங்கிக்குத் தெளிவான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைய ஆவணங்களின் உள்ளடக்கங்கள் தனக்குத் தெரியாது என்றும், வெற்றுத் தாள்களிலேயே தான் கையெழுத்திட்டதாகவும் பிரதிவாதி முன்வைத்த வாதத்தை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கையெழுத்திட்ட நபர் எழுதப் படிக்கத் தெரியாதவராகவோ பார்வையற்றவராகவோ அல்லது பரிவர்த்தனையின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியாதவராகவோ இருந்தால் ஒழிய இத்தகைய வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இதன்படி வணிக மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உயர் நீதிமன்றம், இரண்டு நீதிமன்றங்களினதும் வழக்குச் செலவுகளைப் பெற்றுக்கொள்ள மனுதாரரான வங்கிக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
நீதியரசர்களான யசந்த கோதாகொட ஷிரான் குணரத்ன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.