52 ஆலயங்களில் இன்று முதல் அமுலாகும் தடை; ஆன்மீக சுற்றுலா செல்வோர் அவதானம்!
தமிழகத்தில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில், கோயிலுக்குள் கைபேசிகளை கொண்டு செல்வதற்கு இன்று (1) முதல் முழுமையான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் கைபேசிகள் மூலம் நிழற்படம், காணொளி மற்றும் செல்ஃபி எடுப்பதுடன், சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைப்பேசிகளைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்காக நுழைவு வாயில்கள் மற்றும் பாதணி பாதுகாப்பு மையங்கள் அருகில் பிரத்தியேகப் பாதுகாப்பு பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வடபழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமேசுவரம் ராமநாதசாமி கோயில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 52 முதுநிலை கோயில்களில் இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
விதியை மீறி கைபேசிகளைக் கொண்டுவருபவர்களிடம் இருந்து அவை பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.