13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை ; 20 வயது இளைஞன் கைது
13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை புத்தளம் மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தந்தை தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்த சிறுமியின் தாய் கடந்த மாதம் முதலாம் திகதி நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சிறுமியின் தாய் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.