பதுளை - எல்ல வனப்பகுதியில் திடீர் தீப்பரவல்: 100 ஏக்கர் நிலப்பகுதி தீயில் கருகி சேதம்!
பதுளை - எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலினால் 100 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் சுமார் 17 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டது.
சுமார் 17 மணித்தியாலயங்கள் வரை நீடித்திருந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதுடன், பொலிஸார், இராணுவத்தினர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளும் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது சுமார் 100 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன், இந்த தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இத்தீப்பரவலால் எவ்வித மனித உயிர் சேதமும் ஏற்படவில்லை. எனினும் காட்டு விலங்குகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.