தமிழர் பகுதியொன்றில் அடுத்தடுத்து அரங்கேறும் மோசமான செயல் ; பீதியில் மக்கள்
மன்னார் மாவட்டத்தில் இந்த மாத ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஒரே நாளில் நான்கு கடைகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து மன்னார் நகரின் பல முக்கிய கிராமங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

திருட்டுச் சம்பவங்கள்
குறிப்பாக மூர் வீதி, உப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது வீடுகளில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை, கோவில் உண்டியல்களிலும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டப்பகலிலேயே சில திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் தங்களது வீடுகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு தொடர்பில் மக்கள் அச்சமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் அசமந்தம் போக்குடன் செயல்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் செல்லும் போது, சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் உரிய ஆதாரங்களுடன் வருமாறு அறிவுறுத்தப் படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னாரில் அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.