சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கு ; பிணை வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மரணிக்க செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பான வழக்கில், 14 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தமைக்கு எதிராக, சட்டமா அதிபர் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
புலிகள் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் தம்பையா பிரகாசன் என்பவருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் உட்பட மூவருக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு, இவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்படுவதன் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடும் என சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு எதிராக 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் மேன்முறையீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபருக்கு 200,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் நான்கு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.
2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக, 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி அதிபயங்கர குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.