வெடுக்குநாறிமலையில் 11 அடி புத்தர் சிலை இருந்தது ; சந்தபோதி தேரர் அதிரடி அறிவிப்பு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை பகுதி பௌத்த வழிபாட்டுத் தலம் எனவும், அங்கு கடந்த 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், அதனை மீண்டும் அப்பகுதியில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 25 சிங்கள மக்களுடன் சந்தபோதி தேரர் தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை சென்றிருந்தனர்.
மலைப் பகுதிக்குச் சென்ற குறித்த குழுவினர், சூலம் அமைந்திருந்த பகுதியில் சுமார் ஒன்றரை மணிநேரம் பிரித் ஓதி, பூஜை மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் சைவ மக்களை மலை உச்சிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கருத்து தெரிவித்த சந்தபோதி தேரர், வெடுக்குநாறிமலை ஒரு பௌத்த வழிபாட்டுத் தலம் எனக் குறிப்பிட்டதுடன், அங்கு 2012ஆம் ஆண்டுக்கு முன்னர் 11 அடி உயரமான புத்தர் சிலை ஒன்று இருந்ததாகவும், தற்போது அந்த சிலை தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்த புத்தர் சிலையை மீண்டும் வெடுக்குநாறிமலையில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெடுக்குநாறிமலையில் சைவ வழிபாடுகள் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டதாகவும், தமிழர்கள் போலியான நம்பிக்கையின் அடிப்படையில் அங்கு வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் சந்தபோதி தேரர் குற்றம் சாட்டினார்.
வெடுக்குநாறிமலை தொடர்பில் நீண்டகாலமாக சைவ மற்றும் பௌத்த தரப்புகளுக்கு இடையில் உரிமை மற்றும் வழிபாட்டு விவகாரங்கள் தொடர்பாக சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில், சந்தபோதி தேரரின் இந்தக் கருத்துக்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில், குறித்த பகுதியில் நிலவும் நிலைமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.


