ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி ; நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளவர்களை பாதுகாக்க ஐக்கிய தேசியக்கட்சி முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கையைக் சுட்டிக்காட்டி இந்த விமர்சனத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்படுவதோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்படுவதோ புதிதல்ல ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்திலேயே அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏர்பஸ் வானூர்திக் கொள்முதல் விவகாரத்தில் 100 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே, நீதிமன்றமே நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்தநிலையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அறிக்கை அந்தக் கட்சியின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியை உண்மையாக நேசிப்பவர்களும் அந்தக் கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களும் கூட இந்த அறிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைவார்கள்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்