இளம் பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்தல் முயற்சி ; பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு மத்தேகொட பகுதியில் இளம்பெண் ஒருவரை துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் உறவினர் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி மத்தேகொட கிரிகம் பமுனுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் சந்தேகநபர்கள் அத்துமீறி நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேகநபர்கள் கையில் விளையாட்டுத் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாகவும், வீட்டில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இருந்த மற்றொருவர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மத்தேகொட பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கல்கிசை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகால தனிப்பட்ட தகராறு நிலவியதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.