இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் ; நால்வர் மருத்துவமனையில்
வென்னப்புவ பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளில் இருந்த 12 கடற்றொழிலாளர் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வென்னப்புவவிலிருந்து கடற்றொழிலுக்காக சென்ற 'தினிதி துவ' மற்றும் மற்றொரு படகில் இருந்த கடற்றொழிலாளர்கள், சர்வதேச கடற்பரப்பில் தொழிலை முடித்துவிட்டு கடந்த 28ஆம் திகதி காலை இலங்கை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்திய கடற்படைக் கப்பலால் மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடற்றொழிலாளர்களிடம் போதைப்பொருள் இருக்கிறதா என்று வினவி இந்திய கடற்படை அதிகாரிகள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியதாக பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் நால்வர் பலத்த காயமடைந்த நிலையில் நாடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த விவகாரம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.