காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது கைவைத்த பொலிஸார்; வவுனியாவில் பதற்ற நிலை
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததனால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது கைவைத்த பொலிஸார்
இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கமுடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.
இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா பொலிசாரால் குண்டுக்கட்டாக தூக்கிச்செல்லப்பட்டு பொலிசாரின் பேருந்தில் ஏற்றப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் அவருடன் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டிருந்தது.
இதேவேளை இன்று கைதுசெய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.