சுற்றுச்சூழல் விதிகளை மீறினால் பிடியாணை இன்றி கைது ; வெளியான தகவல்
இலங்கையின் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய திருத்தங்களுக்கு அமைய நாட்டில் நிலவும் காற்று மாசடைவு, நீர் மாசடைவு, மண் மாசடைவு மற்றும் ஒலி அல்லது அதிர்வு மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஆகிய 4 பிரதான விடயங்களுக்கும் பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கபில ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான குற்றச் செயல்களுக்கு இதற்கு முன்னர் மத்திய சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆனால் புதிய சட்டத்தின் கீழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அமைதி காக்கும் உத்தியோகத்தர்களாக தலையிட்டு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபடுவோரை நீதிமன்றப் பிடியாணை இன்றியே அந்த இடத்திலேயே கைது செய்ய முடியும்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சட்ட நடவடிக்கையின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் இடங்களை மிகத் தீவிரமாக கண்காணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.