யாழ். மயிலிட்டி மாதா ஆலயத்தில் மக்களின் ஆன்மீக கோரிக்கை ; அரசியல் ஆதரவின்றி அமைதிப் போராட்டம்
யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி பகுதியில் அமைந்துள்ள புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வருடாந்திர திருவிழாவை நடத்த அனுமதி வழங்கப்படாததால், இம்முறையும் திருவிழா நடைபெறாத நிலை உருவாகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
உள்நாட்டு யுத்தத்தையடுத்து 1990ஆம் ஆண்டில் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்த பின்னர், குறித்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு இராணுவ கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.
கடந்த 36 ஆண்டுகளாக அந்த நிலை தொடர்வதாகவும், ஆலயத்திற்குச் சென்று வழிபட அனுமதி பெற மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இம்முறை திருவிழாவை ஆலய வளாகத்தில் நடத்துவதற்காக, குறைந்தது ஆலய காணியின் ஒரு பகுதியையாவது விடுவித்து வழங்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ தளபதி உள்ளிட்ட பல தரப்பினரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
எனினும், இதுவரை சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1850ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் இந்த பழமையான கத்தோலிக்க ஆலயம், சுமார் 52 பரப்பளவு கொண்ட காணியில் அமைந்திருந்ததாகவும், அதனுடன் தொடர்புடைய பாடசாலை, கன்னியர் மடம், குருமாரின் பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணி உள்ளிட்ட சொத்துகளும் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
பருத்தித்துறை – பொன்னாலை வீதிக்கு அண்மையில், கடற்கரையை ஒட்டிய பிரதேசமாக காணப்படும் இந்தப் பகுதியின் ஒரு சிறிய பகுதியையாவது விடுவித்து வழங்கினால், மக்கள் ஒன்றுகூடி திருப்பலியில் பங்கேற்று தங்களது ஆன்மீக தேவைகளை நிறைவேற்ற முடியும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதில்கள் வெளியாகும் வரை நிலைமை குறித்து தெளிவான தீர்வு எட்டப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் அமைதியான முறையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.