மக்கள் மத்தியில் கேலிக்குரியவராக மாறிய அனுர; சஜித் சாடல்!
உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதாக கூறிய ஜனாதிபதி அனுரகுமார தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி சிறந்த நகைச்சுவைகளை கூறிவருகிறது
இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழல்வாதிகளின் பணத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர். எனினும் பணத்தைப் பதுக்கி வைத்தவர்கள் அதில் நல்ல வட்டிகளை உழைத்து சுகபோகமாக உள்ளனர்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேசிய மக்கள் சக்தி சிறந்த நகைச்சுவைகளைக் கூறிவருகிறது.
மக்களை ஏமாற்றி ஒருபோதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என்றும் சஜித் கூறினார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, கடவுச்சீட்டு வரிசைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக புதிய வரிசைகளை ஏற்படுத்திவருகிறது.
பொருட்கள் விலை மற்றும் வரி குறைப்புகளை மேற்கொள்ளவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதாகக் கூறிய அநுர அரசாங்கம் இன்று அவர்களிடம் மண்டியிட்டுள்ளது.
ஜனாதிபதி இன்று எரிபொருள் சூத்திரத்தின் பணயக்கைதியாக மாறியுள்ளார். சாதாரண டீசல், பெற்றோல் விலைகளைக் குறைக்க சந்தர்ப்பம் இருந்த போதிலும், ஒக்டென் 95 பெற்றோலின் விலையையும், சுப்பர் டீசல் விலையையும் குறைத்து தனவந்தர்களுக்குச் சலுகை வழங்கியுள்ளார்.
பொருட்கள் விலையைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை அவற்றை செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் போதும்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்து சர்வதேச நாணயத்துடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி மக்களுக்கு சிறந்த சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கும் என சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.