அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குங்கள் ; சவுதி மன்னரிடம் இலங்கை தேசிய ஷூரா சபை கோரிக்கை
சவுதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை குடிமகனான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கருணையுடன் பரிசீலிக்குமாறு சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்திடம் இலங்கை தேசிய ஷூரா சபை (NSC) வேண்டுகோள் விடுத்துள்ளது.
24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறவுள்ள வங்காள விரிகுடாவின் தாழமுக்கம் ; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
செப்டம்பர் 19ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்திற்கு அவமரியாதை இழைத்ததாகக் கூறப்படும் வழக்கில் அனுஜன் குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக ஷூரா சபை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், தமது கோரிக்கை சவுதி அரேபிய நீதித்துறை அதிகாரிகளின் தீர்ப்பையோ அல்லது அந்நாட்டின் சட்ட நடைமுறைகளையோ கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல எனவும், முற்றிலும் மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைப்பதாகவும் ஷூரா சபை வலியுறுத்தியுள்ளது.
அனோஜன் தனது நடத்தைக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளதாக ஷூரா சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனோஜன் தனிப்பட்ட மற்றும் குடும்பச் சூழ்நிலையையும் ஷூரா சபை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அவர் பெரிய குடும்பமொன்றை பராமரித்து வரும் சாதாரண வருமானம் கொண்ட இலங்கைத் தொழிலாளி எனவும், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 மில்லியன் சவுதி ரியால் அபராதத்தை செலுத்துவதற்கான போதிய நிதி வசதி அவரிடம் இல்லை எனவும் சபை தெரிவித்துள்ளது.
மேலும், அனுஜன் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திருமணம் செய்துகொள்ளத் தயாராகி வந்ததாகவும், தற்போதைய சூழ்நிலை அவரது குடும்பத்தினருக்கும் திருமணத்துடன் தொடர்புடைய இரு குடும்பங்களுக்கும் பெரும் சிரமத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது வழக்கை மனிதாபிமான அடிப்படையில் கருணையுடன் பரிசீலித்து அரச மன்னிப்பு வழங்குவது அவரது குடும்பத்திற்கு நிம்மதியை ஏற்படுத்தும் எனவும் ஷூரா சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சவுதி மன்னரின் இத்தகைய மனிதாபிமான தலையீடு பல இலங்கையர்களால் நன்றியுடன் வரவேற்கப்படும் என்பதுடன், இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் தேசிய ஷூரா சபை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
அனுஜனின் வழக்கில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன், சவுதி மன்னரிடம் கருணை கோரும் இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தேசிய ஷூரா சபையின் இந்த வேண்டுகோள் அவரது குடும்பத்தினருக்கு முக்கியமான நம்பிக்கையாக அமைந்துள்ளது.