அனோஜனை காப்பாற்ற இரண்டே வழிகள் ; அநுரவின் கைகளில் இறுதி முடிவு
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை காப்பாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கியமாக இரண்டு வழிகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவது, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலையீட்டுடன் சவுதி அரேபிய மன்னரிடம் இராஜதந்திர ரீதியில் கருணை அல்லது பொது மன்னிப்பு கோரி விண்ணப்பிப்பது.

இரண்டாவது, அனோஜன் தரப்பில் சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றத்தில் விசேட மேல்முறையீட்டை முன்னெடுப்பதாகும்.
இந்த இரு வழிகளிலும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அனோஜனின் பெற்றோரை நேற்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது, தமது மகனின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக தலையிடுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அனோஜனுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், சட்ட ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தலையீடு செய்யப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், சவுதி மன்னரிடம் அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சவுதி மன்னரிடம் இராஜதந்திர ரீதியில் கருணை கோருதல் மற்றும் சட்ட ரீதியான மேல்முறையீட்டை முன்னெடுத்தல் ஆகிய இரு வழிகளும் அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.
இந்த விடயம் தொடர்பான முழுமையான காணொளியை இங்கு காணலாம்.....