இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி
களுத்துறை பிரதேசத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹொரண ரெமுன பகுதியில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைதானவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் குறித்த சிறுமி, வசித்து வந்துள்ளார்.
சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி, பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து சிறுமியை ஏமாற்றி, சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தனியார் பேருந்து நடத்துனர் சிறுமியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள பேருந்து நடத்துனரின் வீட்டில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பேருந்து நடத்துனர் சிறுமியை கடத்திச் செல்வதற்கு முன்னர் பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் வன்புணர்வு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.