மீண்டும் சர்ச்சைக்குள்ளான குருந்தூர் மலை விவகாரம் ; துறவியின் மோசடியை அம்பலப்படுத்திய மற்றுமொரு துறவி
தொல்பொருள் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சராக செயல்பட்டிருந்த பௌத்த துறவியான ஜயதிலக்க என்பவரால் குருந்தூர் மலை பிரதேசத்தில் திட்டமிட்டு காணிகள் அபகரிக்கப்பட்டதாக மிஹிந்தலை விஹாராதிபதி கடிதம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறித்த கடிதத்தை பெற்றுக் கொண்டதுடன் அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லும் வழியில் மிஹிந்தலை என்னும் பிரதேசத்தில் உள்ள பௌத்த விஹாராதிபதியின் விசேட அழைப்பின் பெயரில் அவரை சந்தித்தேன்.
அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடைபெற்ற ஒரு முக்கிய விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக என அவர் தெரிவித்தார்.
மேலும், குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது.
இவ்விடத்துடன் தொடர்புடைய வழக்கினை இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் வாதாடியிருந்தார். விஹாராதிபதி எனக்கு எழுத்து மூலமான ஓர் கடிதத்தை வழங்கி இருந்தார்.
அதில் 2025 ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதி அன்று அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரதி. அதில் அவர் பெயர் குறிப்பிட்டு தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அத்தியட்சகராக கடமையாற்றிய ஜயதிலக்க என்னும் நபர், பெளத்த மதத்தோடு தொடர்புடைய சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும், வயல் நிலங்களில் வீசி, அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி, அவற்றை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானதாக கையப்படுத்தியதை தெரியப்படுத்தியிருந்தார்.
பெளத்த துறவியான இவர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம். இந்த ஆவணத்தை என்னிடம் தருவதற்காக என்னை அவர் அழைத்திருந்தார்.
மேலும், அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார்.
இந்த நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை கற்றுக்கொள்வதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும் கற்பிக்க வேண்டும் என்பதனை அவர் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.