அனோஜன் விவகாரம்; பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவுக்கு அமைச்சர் நன்றி
சிவராசா அனோஜனின் விவகாரத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரிய நேரத்தில் செயற்பட்ட பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினருக்கு அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மரண தண்டனை
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை மற்றும் அவரைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பைஸர் முஸ்தபாவுக்கு, நாடு மற்றும் அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பைஸர் முஸ்தபா தலைமையிலான குழுவினர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரிய நேரத்தில் செயற்பட்டுள்ளதாகவும், இது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்பட்டமைக்கான எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த குழுவுக்குத் தலைமைத்துவம் வழங்கி செயற்பட்ட பைஸர் முஸ்தபாவுக்கும் அவருடன் சென்ற பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்தின் சார்பிலும் தனிப்பட்ட முறையிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் குறிப்பிட்டார்.