கொழும்பில் திறக்கப்பட்ட வீதிகள்; ஜனாதிபதி அனுரவிடம் அங்கஜன் முன்வைத்த கோரிக்கை!
வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள்யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக,
- யாழ்ப்பாணம் - பலாலி வீதி (கிழக்கு பக்கம்): வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள வீதி இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த வீதி பருத்தித்துறை பொன்னாலை வீதியுடன் இணைவதுடன் உள்ளூர் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகும்.
- அச்சுவேலி வயாவிளான் - தோளக்கட்டி வீதி: இந்த முக்கிய வீதி மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள முக்கியமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது.
- வயாவிளான் யாழ் விமான நிலைய ஓடுபாதை பக்க வீதி: கட்டுவன் சந்தி ஊடாக இந்த வீதியை திறப்பதன் மூலம் யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான தொடர்பை கணிசமாக மேம்படுத்த முடியும்.
- காங்கேசன்துறை - கீரிமலை வீதி (ஜனாதிபதி அரண்மனை வீதி): வரலாற்று மற்றும் கலாசார தளத்திற்கு இட்டுச் செல்லும் இந்த வீதி மீண்டும் திறக்கப்படுவதால், உள்ளூர் சமூகங்கள் பயனடைவதுடன், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும்.
ஆகவே யாழ்ப்பாண மக்கள் அமைதி மற்றும் இயல்பு நிலைக்கான உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ள சூழலில், இந்த வீதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதால் நல்லிணக்கம் மற்றும் பிரதேச வளர்ச்சி ஆகியன வலுவடைவதுடன், எமது மக்களின் நீண்டகால கவலையை நிவர்த்தி செய்து, அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சிக்கான உங்கள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கும்.
ஆகவே இவ்வீதிகள் மீளத் திறப்பதால் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதோடு எமது தேசத்தின் அமைதியான வளமான எதிர்காலத்துக்கும் உறுதுணையாக அமையும் என்பதால், இந்த வேண்டுகோளுக்கு உங்களது கவனம் செலுத்தப்படும் என நான் நம்புகிறேன் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.