முல்லைத்தீவு இளைஞர்களின் உயிரை பறித்த விபத்து; பொலிஸார் வெளியிட்ட தகவல்
அனுராதபுரத்தில் நேற்று அதிகாலை (25) இடம்பெற்ற கோர விபத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகினர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பயணித்த வானும் லொறியும் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது.
நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணம்
விபத்தில், செம்மலையைச் சேர்ந்த தி.விமலானந்தன் (வயது 38), வள்ளிபுனத்தைச் சேர்ந்த சசிகுமார் (வயது 31), புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நிஷாந்த் (வயது 25), புதுக்குடியிருப்பு, 9ஆம் வட்டாரம் – மல்லிகைத்தீவைச் சேர்ந்த சேர்ந்த ந.தேனுயன் (வயது 25) ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
அனுராதபுரம் – குருநாகல் பிரதான வீதியில் தலாவ – மீரிகம சந்திக்கு அண்மையாக மொரகொட என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த விபத்தில் காயமடைந்த மூவர் தலாவ, அனுராதபுரம் போதனா வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டனர்.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே விபத்துக்குக் காரணம் என்று முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இளைஞர்களின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.