பொலிஸாருக்கு நீண்டநாள் ஆட்டம் காட்டிய போதை வியாபாரி; தனியார் பேருந்தில் மடக்கிப்பிடிப்பு
கொழும்பிலிருந்து அம்பாறைக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற பம்போ என்ற போதைப்பொருள் வியாபாரியை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இன்று (26) அதிகாலை சந்தேக நபர் கொழும்பு தோட்டலக பகுதியில் இருந்து ஹெரோயின் ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்தில் அம்பாறைக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது பேருந்தை சோதனை செய்ததில் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரை ஏமாற்றி கடத்தல் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 2677 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டனர்.
சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல சந்தர்ப்பங்களில் முயன்ற போதிலும் அவர் மிகவும் திறமையாக பொலிஸாரை ஏமாற்றி கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர் அம்பாறை நகரின் மிஹிதுபுர நவகம்புர கல்மடுவ மற்றும் உதயபுர பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.