நாளைய வட மாகாணப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான தகவல்
வட மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (30) திங்கட்கிழமை வழமைபோல் இயங்கும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை. ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
நாளை வட மாகாணப் பாடசாலைகள் இயங்காது என்றும், பரீட்சைகள் நடைபெறாது என்றும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நடவடிக்கைகள்
இது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான அனைத்து கல்விச் செயற்பாடுகளையும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கல்வி அமைச்சின் செயலாளரால் கடந்த நவம்பர் 23ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலைகள் தொடர்ந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை வழமைபோல் பாடசாலைச் செயற்பாடுகளும், திட்டமிடப்பட்ட பரீட்சைகளும் நடைபெறவுள்ளதால், உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாடசாலை அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.