மறைந்த முன்னாள் எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம் ; பலரும் அஞ்சலி
மறைந்த மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரசபையின் நகர பிதாவுமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16) இடம்பெற்று, அவரது பூதவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமான சிவாஜிலிங்கம், தனது 69ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.

இறுதி அஞ்சலி
அவரது பூதவுடல் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மூத்த அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்திய மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டனர்.
மேலும், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன், மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறை நகர வர்த்தகர்கள் தமது வியாபார நிலையங்களை மூடி, கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர்.
நகரசபைக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.