மொனராகலை வீதியில் விபத்து ; பாகிஸ்தான் சுற்றுலாப் பயணி படுகாயம்
மொனராகலை வெல்லவாய – தனமல்வில வீதியின் கித்துல்கொட்டே பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாகிஸ்தான் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார்.
உந்துருளி ஒன்றும் சிற்றூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்தவர், ஒரு மாத சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்திருந்த கராச்சியைச் சேர்ந்த 31 வயதுடைய பாகிஸ்தான் பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்று காலை வெல்லவாயிலிருந்து தனமல்வில நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்திசையில் வந்த சிற்றூந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.
இதன்போது, எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் சிற்றூந்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிற்றூந்து சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி முதலில் தனமல்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிற்றூந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.