பாடசாலை கழிவறையில் ஆடையின்றி கிடந்த மாணவி ; பொலிஸ் விசாரணையில் புதிய தகவல்கள்
இந்தியாவில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே உள்ள அரச பாடசாலையில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மர்ம நபர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த தினம் பாடசாலை கழிவறைக்குச் சென்ற மாணவி, பின்னர் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், இதைக் கண்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தாம்பரம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், புகாரில் தெரிவிக்கப்பட்டது போன்று அரசுப் பள்ளிக்குள் அத்தகைய சம்பவம் நடைபெற்றதை உறுதிப்படுத்தும் ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, சம்பவம் குறித்து அப்பள்ளியில் பயிலும் சில மாணவிகள் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர்.
கழிவறைக்குச் சென்ற மற்றொரு மாணவி, சம்பந்தப்பட்ட மாணவியை அங்கு ஆடையின்றி கிடந்த நிலையில் பார்த்ததாகவும், பின்னர் பாடசாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து அவர் மீட்கப்பட்டதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவத்துக்குப் பின்னர் மாணவியின் கல்வி பாதிக்கப்பட்டதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் சில மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, மாணவியின் நிலை குறித்து பள்ளி தரப்பில் வேறு காரணங்களை கூறுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளியின் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருப்பதால் வெளிநபர்கள் உள்ளே நுழையும் வாய்ப்பு இருப்பதாகவும், பள்ளிக்கு அருகிலுள்ள ஏரிக்கரை பகுதியில் சிலர் மது அருந்துவதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையின் முடிவிலேயே சம்பவத்தின் உண்மை நிலை குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகும்.