பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை; இதையெல்லாம் மறவாது செய்யுங்கள்!
ஒவ்வொரு மாதமும், அமாவாசை வந்தாலும் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய இரண்டுமே மிகச்சிறப்பு வாய்ந்தவை.
ஏனெனில் இறந்துபோன நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் தை மற்றும் ஆடியில் வரும் அமாவாசை ஏற்ற நாளாகும் .
2023 இல் இரு ஆடி அமாவாசை; எதை கடைப்பிடிப்பது
இந்த ஆண்டு ஆடி மாதம் ஜூலை 17 ம் திகதி துவங்கி ஆகஸ்ட் 18 ம் திகதி வரை உள்ளது. இதில் ஆடி 01 ம் திகதி ஒரு அமாவாசையும், ஆடி 31 ம் திகதி ஒரு அமாவாசையும் வருகிறது.
இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் எந்த நாளை ஆடி அமாவாசையாக எடுத்து, விரதமிருந்து முன்னோர்களுக்கு வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனினும் இந்த 2 அமாவாசைகளையும் கடை பிடிப்பது நல்லது தான் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும்.
தர்ப்பணம் செய்வது
நாம் செய்யும் அனைத்து காரியங்களையும், இந்த நாளில் மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் செய்ய வேண்டும். பொதுவாக தர்ப்பணம் அல்லது இறந்தவர்களுக்கு பித்ரு காரியங்களை நீர் நிலைகளின் அருகில் செய்வார்கள்.
இதன் காரணமாக ஆடி அமாவாசை அன்று, ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் பித்து காரியம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதும்.
பித்ரு காரியம் செய்ய, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் புண்ணிய ஸ்தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் அலைமோதுவார்கள்.
தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் நீர் நிலைகள் அல்லது வீட்டிலேயே கூட அமாவாசை தர்ப்பணம் செய்யலாம்.
வீடு முழுவதையும் தண்ணீர் விட்டு கழுவி, சுத்தம் செய்து, பூஜையறையில் சுவாமி படங்களை துடைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, அலங்கரிக்க வேண்டும். முதல் நாளே, இதை செய்து விட வேண்டும்.
நீர் நிலைகளில் கூட்டாக தர்ப்பணம் செய்ய வாய்ப்புள்ளவர்கள், மற்றவர்களுடன் சேர்த்து, பித்ருக்களை வேண்டி தர்ப்பணம் செய்து முடிக்கலாம். இல்லையென்றால், வீட்டில் புரோகிதரை வரவழைத்து தர்ப்பணம் செய்யலாம்.
அன்னதானம்
தர்ப்பணம் செய்ய முடியவில்லை என்னும் பட்சத்தில், உணவு சமைத்து அன்னதானம் செய்யலாம். இறந்த முன்னோர்களில் பெண்கள் சுமங்கலியாக இறந்திருந்தால், சுமங்கலிப் பெண்களை சாப்பிட வரவேற்று, உணவு பரிமாறி, அவரவருக்கு இயன்ற வகையில் சேலை, மஞ்சள், குங்குமம் வழங்கி வழிபட்டு முன்னோர்களின் ஆசி பெறலாம்.
குழந்தைகள் தவிர்த்து, வீட்டில் உள்ள பெரியவர்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னர், உங்கள் மூதாதையருக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைக்க வேண்டும்.
எத்தனை நபர்களை வணங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவர்களுக்கு தனித்தனியாக வாழை இலையில் உணவு பரிமாறி படைக்கலாம், அல்லது பெரிய தலைவாழை இலையில் அனைத்து உணவுகளையும் பரிமாறி படைக்கலாம்.
காகத்திற்கு உணவு
முன்னோர்களுக்கு உணவைப் படைக்கும் முன்பு, யாரும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். அல்லது உணவு படைக்கும் வரை சாப்பிடாமல் இருந்து, விளக்கேற்றி, கற்பூர ஆராதானை செய்து பின்னர் சாப்பிடலாம்.
காகமும் முன்னோர்கள் ஆசீர்வாதமும் காகம் என்பது முன்னோர்களின் அம்சமாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடும் முன்பு, உணவை காகத்துக்கு படைக்க வேண்டும்.
சாதம், காய்கறி, குழம்பு ஆகியவற்றில் நெய் சேர்த்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் / காகம் அமாவாசை அன்று வைத்த உணவை சாப்பிட்டால், முன்னோர்கள் சாப்பிட வந்துள்ளார்கள், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்துள்ளது.
தோஷங்கள் நீங்கும்
இதனால், தோஷங்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சம் உண்டாகும். மேலும், காகம் சனீஸ்வரரின் வாகனம் ஆகும். எனவே, சனி தோஷம் நீங்கும் என்பதும், ஏழரைச் சனி, அஷ்டம சனியின் தாக்கம் குறையும் என்பதும் நம்பிக்கை.
அதேவேளை நீங்கள் வைக்கும் உணவை காகம் வரவில்லை என்றாலோ, அல்லது உணவை சாப்பிடவில்லை என்றாலோ, உங்கள் குடும்பத்தில் இறந்தவர்கள் ஏதோ குறையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.
தானம்
பித்ருக்களுக்கு திதி கொடுக்கும் போது, அவரவரால் இயன்ற அளவுக்கு, உணவு, ஆடை, உள்ளிட்டவற்றை தானமாக வழங்கலாம்.
சிலர், கால்நடைகளுக்கு உணவுகளை தானமாக வழங்குவர். ஆனால், அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. மேலும், அரிசி, தானியங்கள் தானம் செய்தால் மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதிகாலையில் இருந்து உச்சி வேலையான 12 மணிக்கு முன்பே தர்ப்பணம் கொடுத்திட வேண்டும்.
விரத சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பது மதியம் 2 மணிக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பரிபூரணமாக பித்ருக்களுக்கு அவை சென்றடையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.