உலக அழிவு கடிகாரம் புதுப்பிப்பு; மனித நாகரிகத்தின் முடிவு
அணு விஞ்ஞானிகளின் இதழால் (Atomic Scientists' Journal) பராமரிக்கப்படும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தால் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்துள்ளது. உலக அழிவு கடிகாரம் என்பது ஒரு உண்மையான கடிகாரம் அல்ல.

உண்மையான கடிகாரம் அல்ல
அது உலகம் அழிவுப் பாதையை நோக்கிச் செல்வதைக் காட்டும் ஒரு குறியீட்டு அளவீடு ஆகும். இதில் 'நள்ளிரவு' என்பது மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கிறது.
2026 ஜனவரி 27 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு 85 வினாடிகளுக்கு முன்னதாக (அதாவது 1 நிமிடம் 25 வினாடிகள்) நகர்த்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இது 89 வினாடிகளாக இருந்தது, தற்போது மேலும் 4 வினாடிகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
ரஷ்யா - யுக்ரைன் போர், மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஈரான் - இஸ்ரேல் மோதல் ஆகியவற்றால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளமை,
புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் தவறியமை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் மோசமடைந்து வருதல், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல்,தவறான தகவல்கள் பரப்பப்படுவதன் மூலம் உலக அமைதிக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாகும்.
1947 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவால் இந்த நேரக் கணக்கீடு தொடங்கப்பட்டது. 1991 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் போது, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு 17 நிமிடங்கள் பின்னோக்கி பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இது உலகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள ஒரு வலுவான எச்சரிக்கை என விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.