சாக்கு மூட்டைக்குள் இளைஞர் சடலம் ; சிசிடிவி மூலம் வெளியான உண்மை
சென்னையில் இளைஞர் ஒருவரின் உடலம் சாக்கு மூடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐவர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
கடந்த 26ஆம் திகதி காலை, சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் வீதியோரம் இருந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருப்பதை அவதானித்த மக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு சென்று மூடையைப் பிரித்துப் பார்த்தபோது, தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் உடலம் காணப்பட்டழதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் இருந்த சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உந்துருளியில் வந்த இரண்டு நபர்கள் அந்த மூடையைக் கொண்டு வந்து வீசிவிட்டுச் சென்றமை கண்டறியப்பட்டது.
உயிரிழந்தவரின் காற்சட்டைப் பையிலிருந்த கைத்தொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரித்ததில், அவர் பீகாரைச் சேர்ந்த 24 வயதுடைய கௌரவ் குமார் என்பது உறுதியானது.
இந்தக் கொலை தொடர்பாக கௌரவ் குமாரின் நண்பர் உட்பட பீகாரைச் சேர்ந்த ஐவரை காவல்துறையினர் இரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
இதன்போது, கௌரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையையும் தாம் கொலை செய்துவிட்டதாகக் கைதானவர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, அடையார் கால்வாய் மற்றும் கூவம் ஆற்றங்கரைப் பகுதிகளில் அவர்களின் சடலங்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இந்தக் கொடூரக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.