12 வயது முல்லைத்தீவு சிறுமி மரணம்; உறவினர்கள் சந்தேகம்
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுமி நேற்றுமுன்தினம் மாட்டிறைச்சி உணவு உட்கொண்டதன் பின்னர் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உடலில் ஒவ்வாமை
சிறுமியின் தாயாரால் உடனடியாக குழந்தையை தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக முள்ளியவளை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் சிறுமிக்கு ஊசி ஒன்று செலுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பேசிக்கொண்டு சென்ற சிறுமி, குறித்த ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்த நிலையில் சிறுமி உயிரிழந்ததாக வைத்திய வட்டாரங்கள் அறிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் குழந்தைக்கு என்ன நடந்தது?, ஒவ்வாமை காரணமா அல்லது சிகிச்சை முறையில் ஏதேனும் தவறு ஏற்பட்டதா? என்ற கேள்விகள் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சிறுமியை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இனிமேல் இன்னொரு குழந்தைக்கும் இத்தகைய சம்பவம் ஏற்படாத வகையில் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.