6ஆம் தர பாடநூல் சர்ச்சை ; நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு
பாடப்புத்தகத்தில் முறையற்ற விடயம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. 6ஆம் தர பாடநூலில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அரச நிதி முறைகேடு குற்றமில்லையா? இதற்கு யார் பொறுப்புக் கூறுவது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வீட்டின் கூரையில் பொருத்தப்பட்ட தகரம் ஒன்று பறந்துச் சென்றால் அதற்கும் 10 இலட்சம் ரூபா வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் வழங்குவதாக குறிப்பிட்ட நிவாரணங்கள் ஏதும் இன்றளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கிராம சேவகரை பின்தொடர்ந்து செல்கிறார்கள். பெருந்தோட்ட மக்களுக்கு முறையான காணிகள் வழங்கப்படவில்லை.
நிவாரண வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளன. ஆகவே வழங்கிய வாக்குறுதிகள் பொய் என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை நபர் ஒருவர் ஆளும் தரப்பில் உள்ளார் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா மற்றும் பொலிஸ் திணைக்களத்துக்கு பொறுப்பான அமைச்சர் வெட்கப்பட வேண்டும். பாடப்புத்தகத்தில் முறையற்ற விடயம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.6 ஆம் தர பாடநூலில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய விடயத்தை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது அரச நிதி முறைகேடு குற்றமில்லையா, இதற்கு யார் பொறுப்புக் கூறுவது என்று கேள்வியெழுப்பினார்.