தென்னிலங்கை இசைக் கச்சேரியில் மர்மம் ; நூற்றுக்கணக்கான தலைக்கவசங்கள் மாயம்
களுத்துறை ஹொரணை பொது மைதானத்தில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியைக் காண வந்த பார்வையாளர்களின் சுமார் 500 தலைக்கவசங்கள் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஹொரணை தலைமையக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இசைக் கச்சேரியைக் காண வந்த பலர், நிகழ்வு நடைபெற்ற இடத்தில் வாகன தரிப்பிடக் கட்டணத்தை அறவிட்ட பெண்ணொருவரிடம் தங்களது தலைக்கவசங்களை பாதுகாப்பிற்காக ஒப்படைத்து நிகழ்ச்சிக்குள் சென்றிருந்தனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், பார்வையாளர்கள் தங்களது தலைக்கவசங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான தலைக்கவசங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 70-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், தலைக்கவசங்களைப் பொறுப்பேற்றிருந்த ஹொரணை வாராந்த சந்தையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்கள் உள்ளனரா என்பதையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமரா காட்சிகள், சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணாமல் போன தலைக்கவசங்கள் திட்டமிட்ட முறையில் திருடப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.