திடீரென இடிந்து விழுந்த 50 வருட பாடசாலை கட்டிடம்; நத்தார் லீவால் தப்பிய 200 மாணவர்கள்!
திருகோணமலை மூதூரில் அண்மையில் ஏற்பட்ட தித்வா புயலின் தாக்கத்தினால் சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பாடசாலை கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
நத்தார் தினமான கடந்த வியாழக்கிழமை (25) குறித்த கட்டிடம் திடீரென உடைந்து விழுந்துள்ளதுடன் ஆறு வகுப்பறைகளை கொண்ட இந்தக் கட்டிடத்தில், வழக்கமாக 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வந்ததுள்ளனர்.

தப்பிய 200 மாணவர்கள்
இச்சம்பவத்தில் எந்தவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. குறிப்பாக, நத்தார் தினம் என்பதனால் 25ஆம் திகதி பாடசாலை விடுமுறை நாளாக இருந்ததனால் மாணவர்கள் பாடசாலைக்கு வராத நிலையில், அவர்களின் உயிர்கள் தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டதாக பாடசாலை சுற்றுவட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னரும், பாடசாலையின் மற்றொரு பிரதான கட்டிடம் முழுமையாக உடைந்து விழுந்ததாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, தற்போது பாடசாலையில் கடுமையான வகுப்பறை தட்டுப்பாடு நிலவி வருகிறது.

புதிய கல்வியாண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், மேலும் அதிகளவான புதிய மாணவர்கள் இந்த பாடசாலைக்கு வருகை தரவுள்ளதால், கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
எனவே, உரிய அதிகாரிகள் இந்த அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில், மிக விரைவாக நிலையான மற்றும் தகுந்த தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் மற்றும் , மாணவர்களின் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
