யாழில் சிறுவனின் மூளையை துளைத்த பொலிஸாரின் குண்டுகள் ; அரசாங்க தரப்பில் வெளியான புதிய தகவல்
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
இந்நிலையி்ல் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எச்சரிக்கை
கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் விளக்குகையில், வாகனத்தை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, வானத்தை நோக்கிப் பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன. அந்த எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததாலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.