களனி கங்கைப் பகுதிகளுக்கு 48 மணி நேர வெள்ள அபாய எச்சரிக்கை
களனி கங்கை ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று (01) காலை 7.30 மணிக்கு வெளியிட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை, நாளை மறுதினம் (03) காலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல மற்றும் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கனமழை பெய்யும் சாத்தியம் நிலவுவதால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடும் எனவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆற்றைப் பயன்படுத்துவோர் மற்றும் அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.