வங்காள விரிகுடாவில் கொந்தளிப்பான நிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை நிலவக்கூடும் என்பதால், பல நாள் மீன்பிடிப் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்தப் பகுதி, இன்று (22) காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்
இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பின்னர் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளை கடந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடியுடன் கூடிய மழையும் கடல் மிகவும் கொந்தளிப்பானதாகவும் காணப்படலாம்.
எனவே, அடுத்த அறிவிப்பு வரும் வரை வடக்கு அட்சரேகை 5° முதல் 22° வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85° முதல் 100° வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த கடல் பகுதிகளில் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.