குடிவரவு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ; போலி விசாவுடன் 4 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது
போலந்து நாட்டிற்குச் செல்வதற்காக போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தம்பதியினர், கொழும்பு வெள்ளம்பிட்டியவைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
போலந்துக்கு சட்டப்பூர்வமாகச் செல்வதற்காக விசா பெற்றுத் தருவதாகக் கூறி இடைத்தரகர்கள் இவர்களிடமிருந்து 64 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.

அதற்கமைய விசா பெறுவதற்காக இவர்கள் இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போலந்து தூதரகத்திற்குச் சென்று கைரேகை அடையாளங்களையும் வழங்கியுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியளவில் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.
அங்கு குடிவரவு சோதனையின் போது அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் குறித்து சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவை எல்லைக் கண்காணிப்புப் பிரிவின் தொழில்நுட்பப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதன் முடிவில் அந்த விசாக்கள் கள்ளத்தனமாகத் தயாரிக்கப்பட்ட போலி ஆவணங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. தமக்கு வழங்கப்பட்ட விசாக்கள் போலியானவை என்பது குறித்து குறித்த பயணிகள் அதுவரை அறிந்திருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், நாட்டிற்கு வந்த பின்னர் இதற்காக மேலும் ஒரு பெரும் தொகையை இடைத்தரகர்களுக்கு வழங்கவும் அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.