22 ஆவது திருத்தத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள்
நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்றுமுன்தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினமே, அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சர்வதேசிய பலய கட்சி மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த னுக்களை விசாரிக்க பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுக்களில் 22 ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் உள்ளதோடு, அதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது