தமிழர் பகுதியில் 31 வயது இளம் குடும்ப பெண்ணை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியாவில் 31 வயதுடைய குடும்ப பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக 37 வயது குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் இன்று (07) தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பம்பைமடு கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் 31 வயது குடும்ப பெண் ஒருவரை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அயலில் வசிக்கும் குடும்பஸ்தரான 37 வயது நபர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து குறித்த பெண்ணை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனை அவர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். குறித்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டி குறித்த பெண்ணை மீண்டும் பல தடவை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பமான குறித்த பெண் குழந்தை ஒன்றையும் பிரசவித்துள்ளார். இதனையடுத்து பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வந்த போதும், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியிருந்தார்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முள்ளியவளைப் பகுதியில் உள்ள காட்டில் மறைந்திருந்த நிலையில் 37 வயதுடைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.