பிரதேச சபை மேசை லாச்சியில் இருந்த 30 இலட்சம் ரூபாய் திருட்டு
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பாலிந்தநுவர பிரதேச சபைத் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலக அறையில், மேசை இழுப்பறையில் வைக்கப்பட்டிருந்த 30 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பதுரலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச சபைத் தலைவர் கடந்த முதலாம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

காவல்துறையில் முறைப்பாடு
செப்டெம்பர் 15ஆம் திகதி கடமையில் இருந்தபோது, பிரதேச சபையின் உப தலைவர் தனது சொந்தப் பணமான 30 இலட்சம் ரூபாயை பின்னர் பெற்றுக்கொள்வதற்காகத் தன்னிடம் ஒப்படைத்ததாக முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பணத்தை கறுப்பு நிறத்திலான பையொன்றில் இட்டு, தனது மேசையின் இரண்டாவது இழுப்பறையில் வைத்து பூட்டியதாகவும், தினமும் அதனைப் பரிசோதித்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 7ஆம் திகதி காலை 11 மணியளவில், உத்தியோகபூர்வ முத்திரையைப் பெற்றுக்கொள்வதற்காக மேசை இழுப்பறையின் சாவியை அலுவலகப் பணியாளரிடம் வழங்கியதாகவும், அவர் முத்திரையைப் பெற்ற பின்னர் சாவியை இழுப்பறையிலேயே வைத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 8ஆம் திகதி பிற்பகல் 1.15 மணியளவில் அலுவலக அறைக்கு வந்து பணத்தைப் பரிசோதித்தபோது, இழுப்பறையில் பணம் இல்லாததை அவதானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து பணம் தொடர்பில் தேடுதல் மேற்கொண்டதாகவும், கடந்த மாதம் 14ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்யச் சென்ற போதிலும், கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மேலதிகமாகத் தகவல்களைத் திரட்டிய பின்னர் முறைப்பாடு செய்யத் தீர்மானித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கு சம்பவம் தொடர்பில் அறிவித்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த முதலாம் திகதி முறைப்பாடு அளித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரலிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.