யாழில் 40 பரப்பு அரச காணியை ஆக்கிரமித்த தனிநபர்; பறித்தெடுத்த நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான சுமார் 40 பரப்பு காணியை, பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் மீட்டு மீண்டும் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள நீரேந்து பிரதேசத்திற்குச் சொந்தமான குறித்த காணியைத் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, அதனைச் சுற்றி எல்லை வேலிகளையும் அமைத்திருந்தார்.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணி
விசாரணைகளின் அடிப்படையில் காணி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமானது என உறுதிப்படுத்திய நீதிமன்றம், அதனைத் திணைக்களத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பதிவாளர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், நெல்லியடி பொலிஸாரின் பாதுகாப்புடன் காணியைத் திணைக்களத்திடம் கையளித்தனர்.

இதன்போது காணியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த எல்லை வேலிகளும் அகற்றப்பட்டன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை போலி உறுதிகள் மூலம் அபகரிக்கும் காணி மோசடி வலையமைப்புகள் தொடர்பில் பொலிஸார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.