சபையில் கூச்சல் குழப்பம்; சுலோக அட்டைகளை பறித்தெறிந்த அமைச்சர்!
இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
பிரதிச் சபாநாயகர் ரிசி சாலி தலைமையில் காலை 9.30 க்குச் சபை கூடியதும், உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகவிருந்த வேளையில், எதிர்க்கட்சியினர் திடீரென சபையின் நடுவே திரண்டு பெரும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சியினர் பெரும் கூச்சலிட்டு அமளி
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சபாநாயகருக்கு ஒரு வீடா, இரண்டு வீடா?" என்று கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர்.
சுமார் முப்பது நிமிடங்கள் நீடித்த இந்தக் கூச்சல் குழப்பங்கள் காரணமாகச் சபை நண்பகல் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை சபாநாயகரின் அலுவலகத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுடன் சில சந்தேகங்கள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார்.
அதற்குச் சபையில் பதிலளிப்பதாகச் சஜித்திடம் சபாநாயகர் உறுதியளித்திருந்தார். எனினும், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்காமல், பிரதிச் சபாநாயகரே தலைமை தாங்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகருக்கு எதிராகத் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி, கண்டித்தனர். மேலும் அரசாங்கத்தைக் குறைகூறி எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினர்.
அத்துடன், "தனது அலுவலகத்தில் வைத்து இன்று காலை என்னிடம் உறுதியளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, பின்னர் ஏன் சபைக்கு வந்து பதிலளிக்கத் தயங்கினார்?" எனவும் சஜித் கேள்வி எழுப்பினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்கு முன்னரே சஜித் கேள்வி எழுப்பியதால், அவரை தொடர்ந்து பேசுவதற்குப் பிரதிச் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறப்படுவதாகக் குற்றம் சுமத்தியும், சபாநாயகரின் இச்செயலுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆத்திரமடைந்து கோஷங்களை எழுப்பினர்.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பெரும் களேபரங்களுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், பிரதிச் சபாநாயகர் சபையை நண்பகல் வரை ஒத்திவைத்தபின்னர், சபை நடவடிக்கைகள் மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகியதாக கூறப்படுகின்றது.